தென்காசி : தென்காசி சிவகிரி அருகே மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த பால்சாமி மகன் மங்கலம். விவசாயியான இவர் சிவகிரி அருகே பெருமாள்பட்டி பகுதியில் நிலம் குத்தகைக்கு எடுத்து நெல் பயிர் விவசாயம் செய்து வருகிறார். தனது வயலில் எலி தொல்லைகளை போக்குவதற்காக எலிப்பொந்துகளில் விஷம் கலந்த அரிசியை வைத்துள்ளார். அங்கு இரை தேடி வந்த 5 மயில்கள், விஷம் கலந்த அரிசியை உண்டுள்ளது. சிறிது நேரம் கழித்து வயலிலேயே 5 மயில்களும் பரிதாபமாக துடிதுடித்து இறந்தன.
தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில் சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா, சிவகிரி வடக்குப்பிரிவு வனவர் அசோக்குமார் மற்றும் வனத்துறையினர், கரிவலம்வந்தநல்லூர் கால்நடை உதவி மருத்துவர் சசிதரன் மற்றும் பெருமாள்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கல்யாணகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் மங்கலத்தை கைது செய்து சிவகிரி கோா்ட்டு நீதிபதி பிரியங்கா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி வழக்கை விசாரித்து, மங்கலத்தை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மங்கலம் சங்கரன்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.