கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி விழிப்புணர்வு ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வன உயிரினங்கள் மற்றும் யானைகளையும் நாட்டுத்துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு, நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து வனத்துறை அலுவலர்களிடமோ, ஊர் முக்கியஸ்தர்களிடமோ ஒப்படைக்க வேண்டும் என்று ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி அறிவுறுத்தினார். இந்தநிலையில் ஓசூர் தேன்கனிகோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி, ராயக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி போன்ற 7 வனச்சரகங்களிலும் உள்ள அனைத்து வன அலுவலர்களும், யானைகள், இதர உயிரினங்கள் மற்றும் வனத்தின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மலை கிராமங்கள், காப்புக்காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும், திண்ணை பிரசாரம், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு மற்றும் ஊர்வலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
111 நாட்டுத்துப்பாக்கிகள் ஒப்படைப்பு இதன் விளைவாக வனப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து ஊர் முக்கியஸ்தர்கள் மூலம் மற்றும் ஆங்காங்கே புதரில் மறைத்து வைத்து சென்றிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலும், 111 நாட்டுத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இந்த 111 துப்பாக்கிகளையும் மாவட்ட வன உயிரின காப்பாளர் அலுவலகத்தில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.அரவிந்த், மற்றும் அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.குமரன், ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் யாரேனும் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்து வனத்துறையில் கண்டுபிடிக்கப்பட்டால் அல்லது பயிற்சி அளிக்கப்பட்ட மோப்பநாய் படைகள் மூலம் சோதனை செய்து கண்டுபிடிக்கப்பட்டாலோ வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.