திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கொண்டக்கரை ஊராட்சியில் உள்ள குருவி மேடு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பூர்வீக குடிகளாக வசித்து வருகின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு வல்லூர் தேசிய அனல் மின் நிலையம் அமைந்த பின்பு இந்த கிராம மக்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவு கிராமத்தில் பரவி மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், உடல் உபாதைகளை கொடுக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் அதிகபட்சமாக கேன்சரை உண்டாக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து மக்கள் அனுபவித்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் நிரந்தர வேலை மாற்று இடம் அதில் வீடு இந்த மூன்று கோரிக்கைகளை மையப்படுத்தி பல ஆண்டு காலமாக வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல்வேறு விதத்தில் கோரிக்கைகளை வைத்திருந்தனர்.
இருப்பினும் இந்த கோரிக்கைகளுக்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதன் பேரில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் இதற்கான சமரச கூட்டம் நடைபெற்றது. பொன்னேரி வருவாய்த் துறையினர் தலைமையில் காவல்துறையினர்,வல்லூர் தேசிய அனல் மின் நிலைய அலுவலர்கள், கொண்டக்கரை ஊராட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், குருவிமேடு கிராம மக்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் நிலை குறித்த விவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு வல்லூர் தேசிய அனல் மின் நிலைய நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்த பின் முடிவை சொல்வதாகவும் அரசு தரப்பில் மாற்று இடத்திற்கு வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். வாழவே தகுதியற்ற பகுதியாக மாறி இருக்கும் குருவிமேடு கிராமத்தில் பொதுமக்களை காக்கும் விதத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு