தூத்துக்குடி : தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிநகர் பகுதியிலுள்ள சந்திர மஹாலில் (14.03.2023) மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடியில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், ஏ.டி.எம் மையங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு வங்கி அதிகாரிகள் தங்களது வங்கி மற்றும் ஏ.டி.எம் இயந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கண்காணிப்பதற்காக மறைமுக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட வேண்டுமென்றும், முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்கள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் நிறுவ வேண்டும் என்றும், மேலும் ஏ.டி.எம் இயந்திரங்கள் உடைக்கப்படும் போது எச்சரிக்கை மணி அங்கே ஒலிக்கவும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒலிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும், கொள்ளையர்களின் முகம் தெளிவாக தெரியும் வகையில் ஏ.டி.எம் மையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களையும், ரகசிய கேமராக்களையும் பொருத்தவேண்டும் என்றும், அனைத்து வங்கி ஏ.எடி.எம் மையங்களிலும் பாதுகாவலர்களை நியமித்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. சம்பத் தலைமையிலான காவல்துறையினர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம், தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முனியசாமி, மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.