சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே உள்ள நாகல்கேணி பூபதி தெரு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் 37. இவரது மகன் கிரி 9, மகள் மோனிகா 7. இவர்கள் 3 பேரும் நேற்று இரவு கோவளத்தில் இருந்து மண்ணிவாக்கம் வழியாக மொபட்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மண்ணிவாக்கம் புதுநகர் பகுதி அருகே சென்ற போது, சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மொபட் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் மொபட்டில் இருந்த 3 பேரும் லாரியில் பின்புறத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே தந்தை, மகன், மகள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவலறிந்த ஒட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலையோரமாக லாரியை நிறுத்தி விட்டு சென்ற டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மின்விளக்கு வெளிச்சம் இல்லாத சாலையோர பகுதியில் லாரி நிறுத்தப்பட்டிருந்ததால், அதை கவனிக்காமல் வேகமாக வந்த மொபட் மோதி விபத்துக்குள்ளானது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மண்ணிவாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.