திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் பாரத் பெட்ரோலிய முனையம் இயங்கி வருகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் பெட்ரோலிய பொருட்கள் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு பாரத் பெட்ரோலிய முனையத்தில் பெட்ரோலிய பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு டேங்கர் லாரிகள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இங்கு சுமார் 150 லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் பாரத் பெட்ரோலிய நிர்வாகம் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதாகவும், இதில் கடந்த 5ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் இருந்து 15% வாடகையை குறைத்து நிர்ணயம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றி செல்லும் வாகனங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. எண்ணெய் நிறுவனத்தில் இருந்து நேரடியாக டீலர்கள் மூலம் கொண்டு செல்லும் சில லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து தற்போது வாடகையை உயர்த்தி வழங்காமல், குறைத்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கிமீ ஒன்றிற்கு ரூ.3.60 வாடகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 100கிமீ வரையிலான தூரத்திற்கு ரூ.3.30 என குறைப்பதாகவும், அதிக தூரத்திற்கு மேலும் வாடகையை குறைத்து நிர்ணயம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். நாளை முதல் விமான நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாரத் பெட்ரோலிய நிர்வாகம் லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி புதியதாக அறிவித்துள்ள வாடகை நடைமுறையை ரத்து செய்து உரிய வாடகையை வழங்காவிடில் மற்ற எண்ணெய் நிறுவங்களில் உள்ள டேங்கர் லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நீடித்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு