திருவள்ளூர்: வளைகுடா நாடுகளிலிருந்து சமையல் எரிவாயு கப்பல்களில் டன் கணக்கில் கொண்டு வரப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து குழாய்கள் மூலம் எரிவாயு முனையத்திற்கு அனுப்பப்படும். அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு முனையத்தில் இருந்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் மூலம் தென் மாநிலங்களில் உள்ள சிலிண்டர் எரிவாயு நிரப்பும் ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும். அங்கு வீட்டு உபயோக மற்றும் வர்த்தக ரீதியிலான சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்பட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபும் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுபாடுகளை தளர்த்த வலியுறுத்தி
தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புது நகரில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியதால் நாளொன்றுக்கு 250 முதல் 300 லாரிகளில் எரிவாயு எடுத்து செல்லப்படும் பணிகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலை நிறுத்தம் தொடர்ந்தால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு