திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த எரியோட்டை சேர்ந்த தங்கராஜ்(51), பரமசிவம்(48), கீதா(32) ஆகிய 3 பேரை எரியோடு காவல் ஆய்வாளர் சத்யபிரபா மற்றும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 580 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், மடிக்கணினி பிரிண்டர், 2 செல்போன், மற்றும் ரூ.16,920 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் போலீசார் தேர்தல் பணியில் கவனம் செலுத்தியதால் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஏழை எளிய மக்களிடம் விற்பனை செய்து பலர் லாபம் பார்க்கின்றனர். கிராமப் பகுதிகளில் ஏழை எளிய மக்களிடம் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. போலீசார் தொடர்ந்து ரோந்து சென்று லாட்டரி விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.