நாமக்கல் : நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, உத்தரவின்படி கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்வது தொடர்பாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக 37 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
11 செல்போன்கள் மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் இருந்து ரூ.54 ஆயிரத்து 600 ரொக்கம் மற்றும் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 9498181216 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.