ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு இதுவரை 33 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளை காட்டிலும் இது குறைவாகும். மாவட்டத்தில் 499 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதில் 300 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுங்குற்ற சம்பவங்கள் தொடர்பாக இந்த ஆண்டு 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதில் 50 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 89 சதவீதம் ஆகும். 6 வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளது. கொலை முயற்சி, அடிதடி, கலவரம் தொடர்பாக இந்த ஆண்டு 840 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவும் கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைவாகும். மாவட்டத்தில் மக்களிடம் அளிக்கப்பட்ட விழிப்புணர்வின் அடிப்படையில் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் அதிக குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்து 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் ஆகும்.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு உயிர்பலி ஏற்படுத்திய 318 விபத்துகள் நடந்ததில் 340 பேர் பலியாகினர். இந்த ஆண்டு 332 விபத்துகளில் 360 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் விபத்தின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இந்த ஆண்டு 94 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 192 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 105 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கீழக்கரையை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவரின் சொத்து முடக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவினை மீறி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 575 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.34 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
5 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதோடு 60 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்ததாக 451 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 2 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், 22 பேர் மீது குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். 418 செல்போன்கள் மீட்பு 499 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300 வழக்குகளில் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 60 சதவீதம் ஆகும். ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. சைபர்கிரைம் பிரிவின் சார்பில் தொலைந்துபோன செல்போன்கள் குறித்து 603 புகார்கள் பெறப்பட்டு நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் 418 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.