சென்னை : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மினி வேனில் பால் பாக்கெட் எடுத்துச் செல்லும் ட்ரேவில் மறைத்து வைத்து தாம்பரம் பகுதியில் இருக்கும் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தாம்பரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குட்கா விற்பனை செய்பவர்களை போலீசார் தேடி வந்தனர். அப்போது ஒரு கடைக்கு மினி வேனில் குட்கா விற்பனை செய்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணை செய்தபோது அவர் குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த மனவாசகம் (32), என தெரியவந்தது. இவர் உட்பட ஐந்து பேர் கூட்டாக சேர்ந்து பெங்களூரில் இருந்து குட்காவை வாங்கி மினி வேனில் பாட்டே அடியில் பதுக்கி வைத்து,சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் கடைகளுக்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்ததாக தெரிவித்தார்.
அதன் பிறகு சித்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (வயது-22)கூடுவாஞ்சேரியை சேர்ந்த மாரிமுத்து (வயது-42) வேலூர் மாவட்டம் ஆசனம்பேட் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது-23) திருவள்ளுரை சேர்ந்த ஜெயா (வயது-55) இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 லட்சம் மதிப்புடைய 1250 கிலோ குட்கா, இரண்டு மினி வேன், மூன்று செல்போன் மற்றும் 30,000 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.