விழுப்புரம் : விழுப்புரம் எம்.ஜி.சாலை மார்க்கெட் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாசங்கர், தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்குள்ள ஒரு குடோனில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார். உடனே அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அந்த குடோனில் போலீசார் சோதனை செய்ததில் அங்கு 40 சாக்கு மூட்டைகளில் குட்கா, பான்மசாலா போன்ற 500 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பிடிபட்ட நபர், விழுப்புரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த போலோராம் மகன் பிரவீன்குமார் (வயது 30) என்பதும், இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து குடோனில் பதுக்கி வைத்து விழுப்புரம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரவீன்குமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.