தூத்துக்குடி : தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் (04.04.2023) தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ரோச் பூங்கா பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரம் பகுதியை சேர்ந்த குமார் மகன் மாரி (எ) மாரியப்பன் (22) மற்றும் தூத்துக்குடி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது மனைவி லில்லி (30), ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படை போலீசார் குற்றவாளிகளான மாரி (எ) மாரியப்பன் மற்றும் லில்லி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 650 கிராம் கஞ்சா, ரொக்கப்பணம் ரூபாய் 8,650/- மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி மாரி (எ) மாரியப்பன் மீது ஏற்கனவே தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் திருட்டு உட்பட 2 வழக்குகளும், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் திருட்டு உட்பட 2 வழக்குகளும் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், செந்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.