தூத்துக்குடி: தூத்துக்குடி க்யூ பிரிவு காவல்ஆய்வாளர் திருமதி. விஜயஅனிதா தலைமையிலான காவல்துறையினர் ,நேற்று அதிகாலை ஆறுமுகநேரி- காயல்பட்டினம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 2 கார்களை மறித்து சோதனை நடத்தியதில், அவற்றில் முறையான ஆவணங்களின்றி, அத்தியாவசிய மருந்து, மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிலிருந்த மருந்து, மாத்திரைகள், மற்றும் புதிய செல்போன் ஆகியவற்றையும், இரு கார்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் , கார்களில் வந்த ஆறுமுகநேரி ஜெயபாரத ராஜா (36), அவரது தம்பி ஜெயபாரத சாரதி (34) மற்றும் சங்கரலிங்கம் (40), ஆகியோரைக் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, “இவர்கள் மூவரும் சென்னையில் இருந்துமருந்து, மாத்திரைகளை வாங்கி வந்து, காயல்பட்டினம் கடற்கரை வழியாக, படகு மூலம் இலங்கைக்குக் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இலங்கையில் இந்த மருந்து, மாத்திரைகளின் மதிப்பு ரூ.32 லட்சம்” என்றனர். இதுகுறித்து காவல்துறையினர், விசாரனை நடத்தி வருகின்றனர்.