கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வெங்கடேசன் 29. இவர் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் ரொக்கம், 6 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி சங்கிலி ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது பற்றிய தகவல் அறிந்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் திரு.ஜெய்சங்கர் பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவுசெய்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.