திருச்சி: திருச்சி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சிபி 29. இவர் வங்கி கணக்குகளை பிராட்டியூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வைத்துள்ளார். இந்தநிலையில் அந்த வங்கியின் மேலாளருக்கு இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அந்த மெயிலில் சிபியின் வங்கிக் கணக்கிலிருந்து வேறொருவர் வங்கி கணக்கிற்கு ரூ.23 லட்சம் அனுப்பி வைக்கும்படி கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் வங்கி மேலாளர், அந்த இ-மெயிலில் குறிப்பிட்டு இருந்த அந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அப்போது, தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.23 லட்சம் சென்றிருப்பதை தெரிந்து சிபி அதிர்ச்சி அடைந்தார். ரூ.23 லட்சம் மோசடி உடனே இதுபற்றி வங்கி மேலாளரிடம் சிபி கேட்டுள்ளார். அப்போது, அவருடைய பெயரில் வந்த இ-மெயில் குறித்து கூறி, அதன் அடிப்படையில் பணத்தை அனுப்பியதாக கூறியுள்ளார். ஆனால், சிபி தான் இ-மெயில் எதுவும் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார். அப்போது தான் தனது பெயரில் போலி இ-மெயில் அனுப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிபி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி இ-மெயில் அனுப்பிய நபர் யார் என்று தேடி வருகிறார்கள்.