சென்னை : சென்னை பெருநகர காவலில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணமால் போன வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்து, செல்போன்களை மீட்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் காவல் கூடுதல் ஆணையாளர்கள் மருத்துவர் என்.கண்ணன்,இ.கா.ப., (தெற்கு), திரு.டி.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு) அவர்கள் மேற்பார்வையில் 4 மண்டல இணை ஆணையாளர்களின் அறிவுரையின் பேரில் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் 12 காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் காவல் குழுவினர் ஒருங்கிணைந்த தனிப்படை அமைக்கப்பட்டது. காவல் குழுவினர் 12 காவல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு குழுவினருடன் இணைந்து, அவர்களது காவல் மாவட்டங்களில் உள்ள காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டும், செல்போன்களின் சர்வதேச செல்போன் கருவி அடையாள (IMEI) குறியீட்டு எண்களை கொண்டும், செல்போன் நிறுவனங்களின் உதவி கொண்டு, மேற்படி காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை தற்போது பயன்படுத்தி வரும் நபர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து அவர்களிடமிருந்து செல்போன்கள் மீட்கப்பட்டு வருகின்றது. மேலும், சிசிடிவி கேமரா உதவிகளால் செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வாறு காவல் குழுவினர் சென்னை பெருநகர காவல், 4 காவல் மண்டலங்களிலும், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, வடக்கு மண்டலத்தில் 433 செல்போன்கள், மேற்கு மண்டலத்தில் 258 செல்போன்கள், தெற்கு மண்டலத்தில் 357 செல்போன்கள் மற்றும் கிழக்கு மண்டலத்தில் 334 செல்போன்கள் என மொத்தம் சுமார் ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இவற்றில் பெரும்பாலான செல்போன்கள் சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (20.4.2021) காலை, காவல் ஆணையரகத்தில் மேற்படி மீட்கப்பட்ட 1,382 செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியின் அடையாளமாக, 30 நபர்களுக்கு செல்போன்களை ஒப்படைத்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதர செல்போன்கள் சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையாளர்கள் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் நிகழ்ச்சியினை காணொளி காட்சியாக காவல் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கண்டு பார்வையிட்டனர். ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு சென்னை பெருநகர காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் மீட்கப்பட்ட செல்போன்களில் 18.9.2020 அன்று சுமார் ரூ.1.38 கோடி மதிப்புள்ள 1,350 செல்போன்களும், 22.12.2020 அன்று சுமார் ரூ.1.46 கோடி மதிப்புள்ள 1,230 செல்போன்களும் என மொத்தம் சுமார் ரூ.2.84 கோடி மதிப்புள்ள 2,580 செல்போன்கள் மீட்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் தலைமையிலும் , அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையிலும் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் சுமார் ரூ.4.39 கோடி மதிப்புள்ள 3,962 விலையுயர்ந்த செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட செல்போன்கள் கண்டறிவதில் உரிய நடவடிக்கை எடுத்து மக்களிடம் ஒப்படைக்க அரும்பாடு பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்கள் பாராட்டி, வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்