ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே தோப்புக்காடு பகுதியில் நாட்டுப் படகு ஒன்றின் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாகவும், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கொண்டு வந்து பரிமாற்றம் செய்து கஞ்சாவை பெற்றுக் கொண்டு செல்வதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் இவர்கள் பாம்பன் அருகே உள்ள தீவுப்பகுதியில் தங்கியிருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ், காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார், உதவி ஆய்வாளர் திரு.புவனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் தோப்புக்காடு பகுதியில் மறைந்திருந்து கண்காணித்து வந்தனர்.
அப்போது 3 பேர் அந்த பகுதியில் பதுங்கி சென்றனர். காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றபோது தங்கள் கையில் வைத்திருந்த பார்சல்களை போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். காவல்துறையினர் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது 6 பார்சல்களில் 12 கிலோ கஞ்சா, ஜி.பி.எஸ். கருவி ஒன்றும் இருந்தது. இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு பாம்பன் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் கூறிய போது, கடத்தல் கும்பலில் உள்ள ஒருவரின் தகவலின் பேரில் அந்த பகுதிக்கு சென்றோம். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்த கஞ்சா மற்றும் ஜி.பி.எஸ். கருவியை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் அவர்கள் தப்பி செல்வதற்காக வைத்திருந்த நாட்டுப்படகு ஒன்றும் சிக்கி உள்ளது.
ஆனால் அவர்கள் 3 பேரும் தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக தீவுப்பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்