ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பேக்கரி அருகே சிலர் தகராறில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது.
காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.ஜெயபாண்டியன் மற்றும் திரு.நந்தக்குமார் இரவு 10:00 மணிக்கு அங்கு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது மூன்று பேர் ஒரு டூவீலரில் வந்தனர். அவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெயபாண்டியன், நந்தக்குமார் விசாரித்தனர்.
மூவரும் மது போதையில் முன்னுக்குபின் முரணாக பேசினர். மேலும் அவர்கள் அங்கு தகராறில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.விசாரிக்கும் போதே அதில் ஒருவர் முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு அங்கு கிடந்த தென்னை மட்டையால் காவல் ஆய்வாளர்களை தாக்கினார்.
மற்ற இருவரும் காவலர்களின் டூவீலரை தள்ளிவிட்டு ஹெல்மட், கற்களால் தாக்கி விட்டு டூவீலரில் தப்பினர்.இந்த காட்சிகள் அருகில் உள்ள பேக்கரி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. காயம் அடைந்த இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களும், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமார், IPS மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார்.இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். அவர்கள் பழைய குற்றவாளிகளா என்றும் விசாரிக்கிறோம் என்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் பற்றி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கைபேசி (9489919722) எண்ணிற்கு தகவல் கொடுப்பவர்களுக்கு 5,000/- ரூபாய் சன்மானம் வழங்கப்படும். தகவல் கொடுப்பவரின் இரகசியம் காக்கப்படும் என்று இராமநாதபுரம் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்சிப்புளி சின்ன நாகாச்சி வெள்ளமாசி வலசையை சேர்ந்த சுப்பிரமணி மகன் கணேசன் 25, என்பவரை உச்சிப்புளி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்