விருதுநகர் : மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும், அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்யக்கோரியும், மாநில அரசு சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கைவிடக்கோரியும் விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ெரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர். இதனை மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தொடங்கி வைத்தார். ரயில் மறியல் போராட்டத்திற்கு ஊர்வலமாக வந்தவர்களை ரயில் நிலையத்திற்கு முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறிய போலீசார் மறியலுக்கு வந்த 160 பெண்கள் உட்பட 550 பேரை கைது செய்தனர், கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.