மதுரை :மதுரை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் மாநகரில் கோரிப்பாளையம், அண்ணாநகர், தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், பொன்மேனி, பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரை பெரும்பாலான சாலைகளில் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி காணப்பட்டது. குறிப்பாக, ராஜாமில் ரயில்வே கர்டர் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரால் அவ்வழியை கடக்க முயன்ற கேரளாவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து நள்ளிரவில் 3.30 மணிக்கு சிக்கி பழுதாகி உள்ளது. இதில் ,பேருந்தில் பயணித்த பெண்கள் குழந்தை உள்பட 40 பேர் பேருந்தின் உள்ளேயே சிக்கி அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து, காலையில் மழைநீர் வடித்த நிலையில் பேருந்தை மீட்க ஜெசிபி உதவி கொண்டு பாதையில் இருந்து அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரை நகரில் அண்ணாநகர் 36, 37 வார்டு தாசிலாதார் நகர் பகுதிகளில் உள்ள வீரவாஞ்சி தெரு, வ.உ.சி. 1 வது தெரு, தாழை வீதி, அன்பு மலர் வீதி, காதர் மொய்தீன் தெரு, சௌபாக்ய விநாயகர் கோயில் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெரு, வண்டியூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. மதுரை மாநகராட்சி அதிகாரிகள், சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி