மதுரை : வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் வதந்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தம் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி யூடியூபர் மணிஷ் காஷ்யப் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சைபர் க்ரைம் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மணிஷ் காஷ்யப் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அமர்வு, தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலத்தில், போலி வீடியோக்களை பரப்பி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக் கூடாது என்றும் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை நாடவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். போலி வீடியோவை பரப்பிய குற்றச்சாட்டு குறித்து யூடியூபர் மணீஷ் காஷ்யப் உள்பட 4 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பீகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே மணீஷ் காஷ்யப்பை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் நடவடிக்கை எடுத்திருந்தார். இந்தநிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து யூடியூபர் மணிஷ் காஷ்யப் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திரு.விஜயராஜ்