சென்னை: கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த பாஜக முன்னாள் நிர்வாகியை காரில் கடத்திய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் உட்பட 8 பேரை சாஸ்திரிநகர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் போட் கிளப் பகுதியில் வசிப்பவர் நாகராஜ் 31. கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக சார்பில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
லோன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் இவரை ஏற்கனவே ஒருமுறை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் அடையாறை சேர்ந்த மெடிக்கல் ஷாப் உரிமையாளர் நூர்தீன், என்பவரிடம் குறைந்த வட்டியில் 72 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருகிறேன் என 2 ஆண்டுகளுக்கு முன் நாகராஜ் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதற்கான கமிஷன் தொகை என பல தவணைகளில் 92 லட்சம் ரூபாய் வரை நாகராஜ் வாங்கி உள்ளார்.
ஆனால் சொன்னபடி கடன் வாங்கி தரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நூர்தீன் கடந்த 2019 டிசம்பர் மாதம் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி நாகராஜ் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
நீதிமன்ற உத்தரவுபடி தினமும் காலை சாஸ்திரி நகரில் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். வழக்கம்போல் கையெழுத்திட்டு விட்டு காவல்நிலையத்திற்கு வெளிவந்து சிறிது தூரம் நடந்து சென்றபோது ஒரு கும்பல் நாகராஜை காரில் கடத்தி சென்றது.
அந்த பகுதியில் இருந்தவர்கள் இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கார் எண் மற்றும் செல்போன் சிக்னலை வைத்து போரூர் அருகே மடக்கினர்.
நாகராஜை மீட்ட போலீசார், அவரை கடத்திய போரூரை சேர்ந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் மனோகர், சிவக்குமார்,அலெக்ஸ், ஐயப்பன், மணிகண்டன் கன்னியப்பன், சத்ய சாய்பாபா ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் மனோகருக்கு 10 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி முன்பணமாக 10 லட்சம் கமிஷன் தொகை வாங்கியது தெரியவந்தது.
ஆனால் சொன்னபடி, கடன் வாங்கி தராததால் ஆத்திரமடைந்த மனோகர், நாகராஜை மிரட்டி பணத்தை வாங்கி விடலாம் என்ற நோக்கத்தில் தனது நண்பர்கள் உதவியுடன் கடத்தலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
கைதான எட்டு பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.