திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலூர் கிராமத்தில் புகழ்பெற்ற திருவுடையம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் மேலூர் அருகாமையில் கொசஸ்த்தலை ஆற்றங்கரை ஓரம் சுமார் 90 ஏக்கருக்கும் மேல் உள்ளது. நீண்ட நாட்களாக இப்பகுதியில் உள்ள நிலங்களில் மணல் மாஃபியாக்கள் மணல்களை எந்த அனுமதியும் இன்றி எடுத்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு தரப்பினர் காவல் துறை மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்திருந்தாலும் குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் இது குறித்து கமிஷனர் ஆபீஸ் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர்.ஆனாலும் இந்த பகுதியில் நிலவும் மணல் திருட்டை தடுத்து நிறுத்த அரசுதுறை அதிகாரிகள் தவறிவிட்டனர்.
எனவே நாம் தமிழர் கட்சியினர் மணல் அள்ளப்படும் இடத்திற்கு வந்து மணல் எடுத்த பள்ளங்களில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இப்பகுதியில் மணல் அள்ளப்பட்டால் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளான, பட்டமந்திரி,வல்லூர்,மீஞ்சூர், நந்தியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும், கொசஸ்த்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இப்பகுதிகளில் வெள்ளநீர் உட்புகும் அபாயமும் உள்ளதாக எச்சரித்தனர். இதில் முக்கிய அரசியல்வாதிகள் தலையீடு உள்ளதால் உடனடியாக அரசுத்துறை இதில் தலையிட்டு மணல் திருட்டை தடுக்க வேண்டும் எனவும் இதனால் தங்கள் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து கவலைப்பட போவதில்லை எனவும் கூறி இதைவிட பெரிய போராட்டம் விரைவில் நடக்கும் எனவும் தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















