சென்னை: மெரினா கடற்கரையில் இன்று கடலில் குளிக்க முயன்றவர்களை விரட்டி வெளியேற்றிய போலீசார் மெரினா கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை போலீசார் விரட்டி அடித்த காட்சி.
மெரினா கடற்கரை பகுதி முழுவதும், அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மெரினா கடற்கரைக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு தினமும் மக்கள் அதிகளவில் சென்று வருகிறார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் கூடுகிறது.
கடந்த சில நாட்களாகவே மெரினா கடலில் குளித்த போது அலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு மெரினாவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரையில் பொது மக்கள் குளிப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று மெரினா கடற்கரை பகுதி முழுவதும், அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மெரினா கடற்கரை
மணல் பகுதி மற்றும் கடல் பகுதி ஆகியவற்றுக்கு பொதுமக்கள் சென்று விடாத படி போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த போதிலும் ஒரு சிலர் அதனை மீறி கடல் பகுதிக்கு சென்றனர். அவர்களை இன்று போலீசார் விரட்டி வெளியேற்றினார்கள்.
கடற்கரை பகுதியில் தடையை மீறி இளைஞர்கள் குளிப்பதை கட்டுப்படுத்த சிறிய வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தில் சென்ற படி போலீசார் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
மெரினா கடலில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க கட்டுப்பாட்டு அறையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தயார் நிலையில் தீயணைப்பு வீரர்களும், மீட்புப் படையில் இடம்பெற்றுள்ள போலீசாரும் இருந்தனர்.
நீச்சல் பயிற்சி பெற்ற மீனவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். இதுதவிர டிரோன்கள் மூலமாகவும் போலீசார் கடற்கரை பகுதி முழுவதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
போலீஸ் எச்சரிக்கையை மீறி மெரினா கடலில் குளித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அடுத்தடுத்த நாட்களில் அங்கு கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.