திருச்சி : திருச்சி மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், செயின்பறிப்பு சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் டாக்டர்.ஜெ.லோகநாதன்,இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில்,காவல் துணை ஆணையர்,திரு.பவன்குமார் ரெட்டி, இ.கா.ப, (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல் துணை ஆணையர் திரு.வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆகியோரின் மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் கருமண்டபம் சோதனைச்சாவடி அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பி கொண்டு ஓட முயன்றவர்களை மேற்படி தனிப்படையினர் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள்
உறையூர்ச் சேர்ந்த திருப்பதி, கீழகல்கண்டார்கோட்டை சேர்ந்த பிரகாஷ், கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த கிஷோர்குமார் என்று தெரியவந்தது.
அவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில் திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோடு, மருத்துவமனை ரோடு சந்திப்பில் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாகவும்,கடந்த 10 மாத காலங்களில் திருச்சி மாநகர பகுதிகளில் 7 இடங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடமும், இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடமும் செயின்பறிப்பில் ஈடுபட்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.
மேலும் எதிரிகள் திருப்பதி மற்றும் பிரகாஷ் ஆகியோர் கடந்த 28.10.2020-ம் தேதி மாலை திருச்சி கண்டோன்மெண்ட் வார்னர்ஸ் ரோட்டில் தொழிலதிபர் கண்ணப்பனின் மகன் கிருஷ்ணா என்பவரை கடத்திய வழக்கிலும் தொடர்புடையவர்கள் என வாக்குமூலத்தில் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் அவர்களை கைது செய்து, அவர்கள் பறித்த நகைகள் மொத்தம் ரூ 8லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 22 பவுன் நகைகளை கைப்பற்றி, எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்ட திருச்சி மாநகர அதிகாரிகள் மற்றும் தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்