திருவள்ளூர்: சின்னகாவணம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2002-ம் ஆண்டு 8ஆம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள்,மீண்டும் ஒன்று கூடி,பழைய இனிய நினைவுகளைப் புதுப்பித்து, தங்கள் பள்ளிக்கு பெருமையூட்டும் வகையில் பல்வேறு பொருட்களை நன்கொடையாக வழங்கினர். மொத்தம் ரூ. 86,000 செலவில்,பள்ளிக்கு பீரோ, ஸ்பீக்கர், ஆம்ப்ளிபையர், மைக் செட், புத்தகங்கள்,நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், ஸ்கெட்ச், பேன்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் அலுவலகப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் சிலர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, சந்திப்பை மேலும் சிறப்பித்தனர். மாணவர்களுக்கு லட்டு, ஜூஸ், சாக்லேட் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும் சுவையான மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆசிரியர்களை மேடைக்கு அழைத்து, அவர்களிடம் அன்பான அடிகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டனர். மேலும், ஆசிரியர்களுக்கும் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களுக்கும் நினைவுச் ஷீல்டுகள் வழங்கப்பட்டன. பள்ளி நாட்களின் இனிய நினைவுகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதை, நட்பின் உறவு மற்றும் ஒன்றுபட்ட மனப்பான்மையால், இந்நாள் அனைவருக்கும்மறக்க முடியாத நினைவாக அமைந்தது. “நட்பு ஒருபோதும் காலாவதியாகாது. அது புதிய வடிவில் மட்டுமே தொடர்கிறது” என்ற உறுதியோடு, அடுத்த சந்திப்பிலும் மீண்டும் கூடுவோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு