சென்னை : வயதான நபர்களை குறி வைத்து அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ரூ.5 கோடி மோசடி செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர் அரிகுமார் என்பவர் K5 பெரவள்ளூர் காவல் குழுவினரால் கைது. 50 சவரன் தங்க நகைகள், 1 கார், 1 இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கம் ரூ.31,840/- கைப்பற்றப்பட்டு, ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள பங்கு சந்தை கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் சந்திரமதி ஆசிர்வாதம், பெ/87, ஜவஹர்நகர், சென்னை என்பவர் K-5 பெரவள்ளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், அரிகுமார் என்பவர் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் ஶ்ரீராம் அசோசியட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி 2 தவணைகளாக ரூ.15 லட்சத்திற்கு காசோலைகள் பெற்றுக் கொண்டு வட்டியும் கொடுக்காமல், முதலீடு செய்த பணத்தையும் தராமல் ஏமாற்றியதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பெயரில் வழக்குப் பதிவு செய்து, K5 பெரவள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் புளியந்தோப்பு காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவின் உதவியுடன் விசாரணை செய்து, மேற்படி மோசடியில் ஈடுபட்ட அரிகுமார், வ/45, செங்கல்பட்டு என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் ஶ்ரீராம் அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் மூலம் இது போல சுமார் 10க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து சுமார் ரூ.5 கோடி பணத்தை அபகரித்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 50 சவரன் தங்க நகைகள், 1 கார், 1 இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூ.31,840/- கைப்பற்றபட்டு, அவரது பங்கு சந்தையில் முதலீடு செய்த சுமார் ரூ.90 லட்சம் மற்றும் இவரது மனைவியின் பங்கு சந்தை முதலீடு சுமார் ரூ.50 லட்சம் ஆகியவற்றின் வங்கி கணக்கு விவரங்கள் கைப்பற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
