திருச்சி: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் 2 மகன்கள், மகள் உட்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த 1996 முதல் 2001 வரை கால்நடைத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் செங்குட்டுவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே 2013ல் தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்த செங்குட்டுவன் , 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார். ஆனால் அந்த ஆண்டு ஜூலை மாதமே முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மரணமடைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செங்குட்டுவன், சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்த நிலையில் மூச்சு திணறல் காரணமாக உயிரழந்தார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தி.மு.க ஆட்சியில் 1996-2001 காலகட்டத்தில் கால்நடை துறை அமைச்சராக இருந்த செங்குட்டுவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல் மற்றும் மகள் மீனாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.