விருதுநகர்: கடந்த 5 நாட்களுக்கு முன்பாக, மம்சாபுரம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் ராமர் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தோப்புக்குள், அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் புகுந்து, மாங்காய்களை திருடிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த ராமர், அவர்களை தடுக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், ராமரைக் கம்பாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கினர். இதில் ராமருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ராமரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சின்னப்பராஜ் (49) என்பவரையும், அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது. படுகாயமடைந்த ராமரை திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமர், சிகிச்சை பலனில்லாமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மம்சாபுரம் காவல்நிலையத்தில் சின்னப்பராஜ் கொடுத்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், திருவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.