திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனத்தில் முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் மேளதாளங்களுடன் நடனமாடி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே திருப்பாலைவனம் கிராமத்தில் வசிப்பவர் டில்லி குமார். மருத்துவர் ஆக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டாலும் அது முடியாத பட்சத்தில் தனது மகள் நிவேதாவை மருத்துவர் ஆக்கும் கனவோடு இரவு பகலாக உழைத்தார். பின்னர் வெளிநாட்டுக்கு தனது மகளை மருத்துவ படிப்புக்கு அனுப்பி வைத்து மருத்துவர் ஆக்கினார்.
மருத்துவர் பட்டத்துடன் கிராமத்திற்கு வந்த நிவேதாவை திருப்பாலைவனம் கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பல தலைமுறைகளை கடந்தும் தனது கிராமத்திற்கு இதுவரை ஒரே ஒரு மருத்துவர் கூட படித்து பட்டம் வாங்காத நிலையில் முதல் மருத்துவ படிப்பு படித்து பட்டம் பெற்ற நிவேதாவை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து பட்டாசு வெடித்து வீடு தோறும் ஆரத்தி எடுத்து நடனமாடி வரவேற்றனர். பின்னர் பல்வேறு மருத்துவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் நிவேதாவிற்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர். முதல் மருத்துவரை பெற்ற மகிழ்ச்சியில் கிராம மக்கள் வரவேற்ற நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு