திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் பகுதியில் உள்ள முட்புதரில் புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இருப்பதை கண்ட கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் புள்ளிமானை வந்து பார்த்தபோது பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வன்னிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் கும்மிடிப்பூண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் வந்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு கொண்டு சென்றனர். இறை தேடியும், தண்ணீர் தேடியும் வெளியே வந்த புள்ளிமானை நாய் உள்ளிட்ட விலங்குகள் கடித்ததில் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு