திண்டுக்கல்: பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவத்துறையின் சுகாதாரத்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் முகக் கவசம் இல்லாமல் செல்லும் பொது மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராணி,உதவி ஆய்வாளர் சவடமுத்து மற்றும் காவலர்கள் காவல்நிலையம் முன்புறம் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை நிறுத்தி அவர்களுக்கு இலவசமாக முககவசங்கள் வழங்கினர். பேருந்தில் செல்பவர்களுக்கு இலவசமாக முககவசங்கள் வழங்கியும் அவர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினர். கொரோனா நோய் தொற்று பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.