திண்டுக்கல் : தமிழகத்தை அடுத்த அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ பாஸ் அவசியம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வணிக நிறுவனம் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் தலைமையில், மாநகர் நல அலுவலர் லட்சிய வர்ணா மேற்பார்வையில், 16 சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பொதுஇடங்களில் முக கவசம் அணியாமல் இருந்த, 40 பேரிடம் தலா ரூ. 200 அபராதம் வீதம் ரூ 8000 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அதேபோல், தாடிக்கொம்பு வட்டாரத்துக்ககு உட்பட்ட பகுதிகளில் சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் தலைமையில், 6 பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஆட்டோ, பஸ் மற்றும் பொதுஇடங்களில் முக கவசம் அணியாமல் சென்ற பொது மக்களிடம் 31 பேரிடம் இருந்து ரூ. 6 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்தனர். திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுஇடங்களில் முக கவசம் அணியாமல் சென்ற அவர்களிடமிருந்து ரூ 14 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டுள்ளது.