திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது உவர்ப்பு நீர் ஏரியா ஆகும். பழவேற்காடு பகுதி சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலானோர் ஏரி மற்றும் கடலில் இறால் நண்டு மற்றும் மீன் பிடித்து வருகின்றனர் பழவேற்காடு கடலும் ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்கு சென்றும் ஏரி மற்றும் கடலில் சுழற்சி முறையில் மீன் பிடித்து வருகின்றனர் இங்கு மீன் பிடிப்பவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று வருவதால் , மீன்கள் ஐஸ் வைத்து பதப்படுத்தப்படாமல் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன. இறால் நண்டு மீன்கள் விலை மிகவும் குறைவாக காணப்படுவதால் சென்னை மற்றும் பிற மாவட்ட கிராம மக்கள் மிகவும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தற்போது மீன்பிடி தடைகாலம் காணப்படுவதால் சென்னை எண்ணூர் காசிமேடு பகுதிகளில் விசைப்படகு மற்றும் இன்ஜின் படகுகளில் மீன் பிடிக்க செல்லாததால் அப்பகுதி மீன் வியாபாரிகள் பைபர் படகு நாட்டுப் படகு மூலம் பழவேற்காடு மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருவதால் பழவேற்காட்டிற்கு சென்று வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
பழவேற்காடு சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டதால் கோடை விடுமுறையை கண்டுகளிக்க சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் கார்கள் இருசக்கர வாகனங்கள் பேருந்துகள் மூலம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதுண்டு அவ்வாறு வரும் பயணிகள் மீன் வாங்கி செல்வதுண்டு இதனால் பழவேற்காடு எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்நிலையில் மீன்பிடி இறங்கு தளம் ஏரி அருகே கடந்த 4 மாதமாக மீன் கழிவு மற்றும் குப்பை கழிவு மலை போல் குவிந்து காணப்படுவதால் மீன் ஏல கூடத்தில் வியாபாரம் செய்ய முடியாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு மீன் வாங்காமல் செல்வதாகவும் டீ காபி மற்றும் சாப்பிட முடியாமல் தவிப்பதாகவும் காற்றுடன் கலந்து ஊருக்குள் வீசுவதாகவும் மற்றும் மீன் ஏலக் கூடத்தில் உள்ள கழிவு நீர் கால்வாய் பல மாதங்களாக அடைபட்டு குளம் போல் தேங்கி வெளியேறி பயங்கரமான துர்நாற்றம் வீசுவதாகவும் கால்வாயில் இருந்து வெளியே வழிந்தோடும் கழிவு நீரால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் மீன் ஏல கூடத்தை சுற்றி வருவதாகவும் இதனால் நோய் பரவ காரணமாக உள்ளதாகவும் பலமுறை மீன்வளத்துறை மற்றும் கோட்டை குப்பம் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
மலை போல் குவிந்து காணப்படும் மீன் கழிவுகள் அலையில் அடித்து செல்லப்பட்டு படகுகளில் இருந்து மீன் இறக்கும் போது கால்களில் மீன் முள் குத்தி மீனவர்கள் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி மீன் வியாபாரிகள் 50 க்கும் மேற்பட்டோர் திடீரென ஏரியின் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மீன் வாங்க வந்திருந்தவர்கள் பதட்டத்துடன் காத்திருந்தனர். இது குறித்து மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்ததாவது மீன்பிடி இறங்குத்தளமானது கடந்த 2004 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. மீன்பிடி தொழில் செய்பவர்கள் வியாபாரிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மீன் பிடி ஏல கூடம் போதியதாக இல்லை எனவும், இட நெருக்கடியால் அடிக்கடி வியாபாரிகளுக்குள் பிரச்சனை ஏற்படுவதாகவும் ஏல கூட தளம் முழுவதும் உடைந்து உரிய பராமரிப்பு இல்லாததால் மீன்கள் வைக்க முடியவில்லை.
எலி தொல்லை அதிகமாக காணப்படுவதாகவும், அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் இருளில் வியாபாரம் செய்து வருவதாகவும், சோலார் மின்விளக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும், மீன் ஏல கூடத்தில் உள்ள கழிவு தண்ணீர் கால்வாய் அடைபட்டு பல மாதங்களாகவும் தூர்வாரி அகற்ற நடவடிக்கை இல்லை எனவும் மீன் பிரியர்கள் வாங்குவதற்கு மீன் ஏல கூடத்தை சுற்றிலும் கழிவுகள் தேங்கி இருப்பதால் அச்சப்படுவதாகவும் பலமுறை மீன்வளத்துறை மற்றும் கோட்டைக்குப்பம் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதி இல்லை எனவும் வெயில் மற்றும் மழையில் இருந்து வியாபாரம் செய்வதாகவும் தினமும் வரிவசூல் செய்யும் மீன்வளத்துறை நிர்வாகம் நிழற்குறை அமைத்து தர வேண்டுமெனவும் தினமும் குப்பை மீன் கழிவுகளை அகற்றி சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. மில்டன்