திருவள்ளூர்: கடந்த 2008-ம் ஆண்டு இங்கு தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக காட்டுப்பள்ளி பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 150 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. வேலை வழங்கி கடந்த 15 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வருகின்றனர். அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வேலை உறுதி வழங்க வேண்டும். நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை இப்பகுயை சேர்ந்த மீனவர்கள் ஒட்டு மொத்தமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் தனியார் நிறுவன அதிகாரிகள் மீனவர்கள் கொண்ட குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது நாள் வரையில் இப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதனை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் தினமான 19ஆம் தேதி அன்று காட்டுப்பள்ளி குப்பம் மீனவ கிராம மக்களை மீண்டும் பணியமர்த்த மறுக்கும் எல்&டி மற்றும் அதானி துறைமுக நிறுவனங்களை கண்டித்தும், நிறுவனங்களுக்கு கை கூலிகளாக செயல்படும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொன்னேரி தொகுதி நிர்வாகத்தை கண்டித்தும் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி நாடாளுமன்ற தேர்தல் புறகணிப்பு போராட்டத்தை கிராம மக்கள் அறிவித்து உள்ளனர். இதற்கு மற்ற கிராம மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் தற்போது காட்டுப்பள்ளி ஊராட்சி க்குட்பட்ட மற்ற கிராமங்களும் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள 2000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்திற்கு செல்ல மாட்டார்கள் எனவும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதால் பழவேற்காடு பகுதியைச் சென்ற மற்ற மீனவ கிராமங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் திருவள்ளூர் மாவட்ட மீனவர் பகுதி முழுவதிலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு