நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே தனியார் கல்லூரி எதிரே இருக்கும் மேம்பாலத்தில் விபத்தில் சிக்கிய 2 லாரிகளில் உள்ள ஓட்டுனர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு ஏற்றிக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த வாகனம் மோதி பலத்த காயங்களுடன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பெரியசாமி மற்றும் அதே காவல் நிலையத்தைச் சேர்ந்த பார்த்திபன் மேலும் லாரி ஓட்டுனர்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் தொடர் சிகிச்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் சிகிச்சையில் இருந்த உதவி ஆய்வாளர் பலியானது காவல்துறை வட்டாரங்களில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீட்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பலியானதை தொடர்ந்து அவருடைய உடல் அவருடைய சொந்த ஊரான ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
இங்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ், ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் திரு.லட்சுமணகுமார், வெண்ணந்தூர் உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் என காவல்துறையினர் அண்ணாரது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து நல்லடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.