திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சேர்ந்தவர் சித்திக்பாஷா, இவர் மீஞ்சூர் பஜாரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தேவராஜ் என்பவர் சித்திக்பாஷாவிற்கு போன் செய்து தனக்கு ரவுடி மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். மீஞ்சூரில் பல கடைக்காரர்கள் தமக்கு ரவுடி மாமூல் கொடுத்து வருவதாகவும், மாமூல் தரவில்லை என்றால் உன்னை போட்டு தள்ளிவிடுவேன் என மிரட்டியுள்ளார். தமது கூட்டாளிகளை அனுப்பி வைக்கிறேன் எனவும், அவர்களிடம் பணத்தை கொடுக்கவில்லை என்றால் நாளை கடையை திறக்க முடியாது என்றும் மிரட்டியுள்ளார். அன்று இரவு திடீரென ஜவுளிக்கடைக்குள் புகுந்த 5பேர் கொண்ட கும்பல் சித்திக்பாஷாவிடம் கத்தியை காட்டி மிரட்டி ரவுடி மாமூல் கேட்டு மிரட்டியுள்ளது. கடையில் இருந்த வசூல் பணத்தை கேட்டபோது, வசூல் பணத்தை சரக்கு வாங்க கொடுத்துவிட்டதாக கூறியதால் மறுநாள் காலை பணத்தை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சித்திக்பாஷா இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்திடம் தெரிவித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மிரட்டி பணம் பறித்தல், அத்து மீறி நுழைதல், கும்பல் கூடுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரவுடி மாமூல் கேட்டு மிரட்டிய முகேஷ், தீபக், சந்தோஷ், கண்ணன், ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் 17வயது சிறுவன் ஒருவனை கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தொடர்ந்து ஜவுளிக்கடை உரிமையாளரை போனில் மிரட்டிய தேவராஜை போலீசார் தேடி வருகின்றனர். ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரவுடி மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவம் மீஞ்சூரில் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு