விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில், திண்டுக்கல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் (29), விக்னேஷ் (33) ஆகிய இருவரும் உடல்நல பாதிப்பிற்காக உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி இரவு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று கைதிகளின் பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் மீது மிளகாய் பொடியை தூவி, கண் இமைக்கும் நேரத்தில் கைதிகள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். மருத்துவமனைக்குள் புகுந்து கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைதிகளை தாக்கிய மர்ம கும்பலை பிடிப்பதற்கு 5 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
இது குறித்து அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணையில் கைதிகளை தாக்கிய சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபட்டது தெரிய வந்தது. தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் மதுரை, தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (30), தங்கமடை (32) ஆகிய இருவரும் பிடிபட்டனர். பிடிபட்ட இரண்டு பேரையும் தனிப்படை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து, பிடிபட்ட இருவரிடமும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனைக்குள் புகுந்து கைதிகளை தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி