விழுப்புரம் : விழுப்புரம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளை கண் காணித்து கைது செய்வதற்கு மின்னல் ரவுடி வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை டி.ஜி.பி. திரு. சைலேந்திரபாபு, தொடங்கினார். அதன்பேரில் முக்கிய ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி தமிழகம் முழுவதும் ரவுடிகளை கைது செய்தனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு திரு. ஸ்ரீநாதா, மேற்பார்வையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்கள் தீவிரமாக களம் இறங்கினர்.
10 பேர் கைது இதில் ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 வழக்குகள் பதியப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 206 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது, புதுச்சேரி மது பாட்டில்கள் 983 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் நேற்று குட்கா வழக்குகளில் 450 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டது மேற்கண்ட தகவலை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.