செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம்அரசு பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு இழப்பீடு மற்றும்அரசு வேலை வழங்க வேண்டும் என உறவினர் மற்றும் பொதுமக்கள் மின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் துணை மின் நிலையத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான டிராக்டரில் மின் கம்பங்களை ஆணைக்குன்றம் கிராமத்தில் உள்ள தனியார் கல் குவாருக்கு ஏற்றி வந்தனர். அப்போது அச்சிறுப்பாக்கம் இ.பி.காலனி பகுதியில் எதிர்பாராத விதமாக ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள முள் புதரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் பயணம் செய்த அரசுபள்ளி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காட்டுகரணை கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் என்ற பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் லோகித் கிஷோர்குமார் என்ற இரு மாணவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மாணவரின் உறவினர்கள் கிராம பொதுமக்கள் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு
மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று எலப்பாக்கத்தில் உள்ள மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக போதிய அரசு பேருந்து இல்லாத காரணத்தினால் இது போன்று விபத்துகள் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு போதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மின்சார வாரிய இளநிலை உதவி பொறியாளர் இழப்பீடு வழங்க கடிதம் மூலம் எழுதிக் கொடுத்தார். அதன் பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் இரண்டு மாணவர்களுக்கும் போதிய மருத்துவ அடிப்படை வசதியும் நிவாரண உதவியும் பெற்று தருவதாகவும் கூறினார். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் துணை மின் நிலையத்தில் அரசு பள்ளி மாணவன் விபத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு 6 மணி நேரம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்