கோவை : கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி (42). இவர் சொந்தமாக மினி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் தனது மினிவேனை காந்திபுரம் 100 அடி ரோடு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு டீக்கடைக்கு சென்றுவிட்டு வந்த அவர் பின்னர் வேனுக்குள் ஏறி ஸ்டார்ட் செய்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென்று மலையாண்டியை தள்ளிவிட்டு வேனை திருடி சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை திருடிய கோவை வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார், வாசுதேவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதேபோல் கோவை வீரியம்பாளையத்தை சேர்ந்த ஜாக்குலின் (46) என்பவர் தனது ஸ்கூட்டரை கடந்த 20-ந் தேதி வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. அதை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்கூட்டரை திருடியதாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த குமரேசன் (39) என்பவரை கைது செய்தனர். திருட்டு போன ஸ்கூட்டர் மீட்கப்பட்டது.
A. கோகுல்