விழுப்புரம் : விழுப்புரம் விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள சூரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று மதியம் விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த மினி வேனிற்குள் 40 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த மினி வேன் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (28) என்பதும், இவர் கெடார், சூரப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை திருவண்ணாமலையில் உள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டு செல்ல கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.