சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘‘தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) என்ற திட்டத்தை தொடங்கி, சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் குழுவினர் 23.08.2021 அன்று காலை எண்.16/32, வெங்கடாச்சலம் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை என்ற முகவரியிலுள்ள வீட்டை கண்காணித்தபோது, அங்கு சட்டவிரோதமாக மாவா தயாரித்த 1) பாலசுப்ரமணியம் 49, 2)ஜெயபிரகாஷ் 35, 3)ஆனந்த் 34, கொடுங்கையூர் 4) பொம்மி (எ) அழகம்மாள் 69, மற்றும் 5) சாந்தி 55பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.
மேற்படி குற்றவாளிகளிடமிருந்து 40 கிலோ மாவா, 6 கிலோ ஹான்ஸ், மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான 200 கிலோ ஜர்தா, 130 கிலோ சீவல் பாக்கு, இதர பொருட்கள் 9 கிலோ, 1 கிரைண்டர், 1 மிக்சி, ஜார், 1 எடை மெஷின், 1 ஆட்டோ, 2 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள் மற்றும் பணம் ரூ.2,300/- ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.