தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கிராம உதய தொண்டு நிறுவனம் மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்து புதிய வடிவிலான சட்ட சேவை விழிப்புணர்வு முகாம் நேற்று (06.11.2022) புதுக்கோட்டை ஆர்.சி திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார். அதனை தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரிய அட்டையும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கைபேசி மற்றும் மரக்கன்றுகளும் வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது செல்போனால் உருவாகக்கூடிய ஆபத்தினையும், அதில் இருந்து பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், புதிதாக போடப்பட்டுள்ள வாகன பாதுகாப்பு சட்டத்தை பற்றியும், இலவச சட்டத்திட்டத்தை பற்றியும், அரசு நலத்திட்டத்தை இலவச சட்ட உதவி மையம் மூலமாக எவ்வாறு பெறலாம் என்றும், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தையும் காவல்துறையையும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி திருமதி. ப்ரீத்தா தலைமையில் நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்ட சார்பு ஆட்சியர் திரு. கவ்ரவ்குமார், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/சார்பு நீதிபதி திருமதி. ப்ரித்தா, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதிகள் சேரலாதன், செல்வி. ஜலதி, தூத்துக்குடி தாசில்தார் திரு. செல்வகுமார், கிராம உதய தொண்டு நிறுவன இயக்குனர்/நிறுவனர் டாக்டர். திரு.சுந்தரேசன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு. சங்கரன், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.