இராணிப்பேட்டை: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவிவரும் உருமாறிய வைரஸ் பரவல் தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும் படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு வழிகாட்டுதலின்படி வரும் 31.12. 2021 அன்று இரவு இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடி புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்கள்.
எனவே இராணிப்பேட்டை மாவட்டத்தில் 31.12.2021 அன்று இரவு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், நட்சத்திர, ஓட்டல்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் இதர சாலைகளில் போன்ற இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வழிபாட்டு தளங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றினை கண்காணிக்க காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் நெடுஞ்சாலைகளில் குற்றங்களை தடுக்க ரோந்து வாகனங்கள் (High Way Patrol) மூலமாக கண்காணிக்கப்படும்.
புத்தாண்டு அன்று குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியவற்றினை தடுக்க மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படும் மேலும் மாவட்டம் முழுவதும் புத்தாண்டு பாதுகாப்பிற்காக 600 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திருமதி.தீபா சத்யன், இ.கா.ப., அவர்கள் தெரிவிக்கையில் புத்தாண்டு கொண்டாட்டம் (Celebration) என்ற பெயரில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வாகனம் ஓட்டுவது, 2க்கும் மேற்பட்ட நபர்களுடன் இருசக்கர வாகனங்களில் செல்வது போன்றவை விபத்துக்கு வழிவகுப்பதாகவும், எனவே இவ்வாறானவற்றை தவிர்த்து இளைஞர்கள் சந்தோஷமாக எவ்வித விபத்து, கொரோனா நோய்த்தொற்று இல்லா புத்தாண்டினை கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
மேலும் இளைஞர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி புத்தாண்டை பாதுகாப்பாக வீட்டிலேயே கொண்டாடுமாறும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்கள், மேற்கூறியவற்றை மீறி செயல்படுபவர்கள் மீது காவல் துறையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.கஜேந்திரன்
அரக்கோணம்