தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ திருவிழா நாளை (10.05.2024) மற்றும் 11.05.2024 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் இன்று (09.05.2024) புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனி மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 5 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 20 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 68 காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினர்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. எடிசன், தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. உன்னிகிருஷ்ணன், திருநெல்வேலி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. பாலசந்திரன், தென்காசி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தனராஜ் கணேஷ், மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.