விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு. மேகநாதரெட்டி, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில், விவசாயிகள் தங்களது விளை பொருட்களான காய்கறி வகைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தைகளில் காய்கறிகளை விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், பொதுமக்களுக்கு மலிவான விலையில் காய்கறிகள் கிடைத்து வருகிறது.இதே போல விவசாயிகளிடமிருந்து கிடைக்கும் சிறு தானியங்கள், பருப்பு வகைகள், உணவு தயாரிக்கும் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள், காளான், வெல்லம் உள்ளிட்ட பொருட்களையும் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில், எந்த ஊரில் உள்ள உழவர் சந்தையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்களோ, அந்த உழவர் சந்தையில் மாலை நேரமும் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் உழவர் சந்தை தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ராஜபாளையம் உழவர் சந்தையில், மாலை நேர சந்தை செயல்பட உள்ளது என்று ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி