தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஆத்தூர், குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று 20.01.2023 ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் தலைமையிலான போலீசார் ஆத்தூர் தாமஸ்நகர் பகுதியில் பொதுமக்களிடமும், குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் குரும்பூர் சுந்தர்ராஜபுரம் பகுதியில் பொதுமக்களிடமும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ் தலைமையிலான போலீசார் ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக சந்திப்பு பகுதியில் பொதுமக்களிடமும், நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. எபனேசர் தலைமையிலான போலீசார் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூயமாற்கு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடமும் மற்றும் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான்ரோஸ் தலைமையிலான போலீசார் மெஞ்ஞானபுரம் மருதூர்கரை பகுதியில் பொதுமக்களிடமும் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கஞ்சா புகையிலை போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பொதுமக்கள் தகவல் தருவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்போன் எண்: 83000 14567 என்ற எண் குறித்தும் மேற்படி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மேற்படி காவல்துறையினரின் முன்னிலையில் கீழ் கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ‘நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்” என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் உட்பட அனைவரும் ஏற்று குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.