மாரடைப்பு – ஹார்ட் அட்டாக் (heart attack) என்பது தற்போது சர்வசாதாரணமாக பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. அதிலும், சர்க்கரை நோய் மற்றும் இரத்தக் கொதிப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு அபாயம் மற்றவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. அப்படி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு அபாயத்தைத் தடுக்க உதவும் மூலிகைகள் பற்றி பார்ப்போம் வாங்க.
தற்போதைய நவீன காலகட்டத்தில் வேலையால் ஏற்படும் அவசரம் மற்றும் அலைச்சல், வாழ்க்கை முறை, மன உளைச்சல், குடும்ப பிரச்சனைகள், மன அழுத்தம், தற்கால உணவுமுறை போன்றவற்றால் எந்தவித நோய் இல்லாத ஆரோக்கியமானவர் கூட ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக இளம் வயதினருக்குக் கூட எந்தவித அறிகுறிகளும் இல்லாமலே இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருமடங்கு உள்ளது.
சர்க்கரை நோய் மாரடைப்பை ஏற்படுத்துமா ?
ஒருவருக்கு நீரிழிவு நோய் மோசமடையும் போது, அவரின் இதய ஆரோக்கியமும் மோசமடையும். இதனால் அவர்களுக்கு திடீர் ஹார்ட் அட்டாக்குகள் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, உயர் இரத்த சர்க்கரை இரத்த நாளங்கள் மற்றும் இதய நரம்புகளை சேதப்படுத்தும். எனவே, உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளவர்கள் உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு பெரும்பாலும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
அதோடு, உங்களின் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும்.
மாரடைப்பு வராமல் தடுக்கும் மூலிகைகள் : நீரிழிவு நோயாளிகள் அதிலும் குறிப்பாக வயதானவர்களுக்கு நீரிழிவு மருந்துகளை உட்கொள்வதால், வளர்சிதை மாற்றம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகளில் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தக் குறைபாடுகள் இறுதியில் மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்று ஆயுர்வேத நிபுணர் கூறுகின்றனர். சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்கவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவும் நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஐந்து ஆயுர்வேத மூலிகைகள் பற்றி பார்ப்போம் வாங்க.
மூக்கிரட்டை மூலிகை (புனர்நவா) : சிறந்த டையூரிடிக் ஆக விளங்கும் இந்த மூக்கிரட்டை மூலிகை சாறு இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. அதோடு, இது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்களுக்கும் மிகவும் நல்லது. மேலும், இது வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவும். வடமாநிலங்களில் இந்த மூக்கிரட்டை மூலிகை புனர்நவா என்று அழைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2-லிருந்து 5 கிராம் மூக்கிரட்டை சாற்றை சாப்பிடலாம். அல்லது அதன் இலைகளை மென்று சாப்பிடலாம்.
சுக்குப் பொடி : ஆயுர்வேதத்தில் சிறந்த மூலிகையாக விளங்கும் உலர் இஞ்சியான சுக்கு இரத்த சர்க்கரைக்கு மிகவும் நல்லது. சுக்குத் தூள் சிறந்த இதய பாதுகாப்புக்கு மட்டுமின்றி, வளர்சிதை மாற்றத்திற்கும் உதவக்கூடியது. இது ஒட்டுமொத்த உடல் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற வீதத்தில் அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து உணவுக்கு முன் சாப்பிடலாம்.
மிளகு : எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகையான மிளகு இன்சுலினைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதோடு மட்டுமின்றி, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடுகளை குறைக்கவும் உதவுகிறது. இதனை எடுத்துக் கொள்வதும் மிகவும் எளிது. தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு மிளகு எடுத்து அப்படியே உண்ணலாம்.
ஏலக்காய் : இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த மூலிகை ஏலக்காய். ஏலக்காயை இனிப்பு உணவுகளில் சேர்ப்பதன் மூலம் இனிப்பை அதிகம் சாப்பிடுவது குறையும். அதிலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிக அளவில் இருக்கும். அப்போது ஏலக்காய் சேர்த்த இனிப்புகள் சேர்த்தால், இனிப்பு சாப்பிடும் எண்ணம் குறையும். இதனால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். ஏலக்காயை டீயில் தட்டிப் போட்டு அருந்தாலம் அல்லது ஏலக்காயை பொடி செய்து சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
மருதம் பட்டை (அர்ஜுனா பட்டை) : மருத மரங்களில் இருந்து எடுக்கப்படும் மருதம் பட்டை இதய நோய்களைத் தடுப்பதற்கும், அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவும் சிறந்த மூலிகையாகும். அதுமட்டுமின்றி, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் முதல் டாக்ரிக்கார்டியா வரை அனைத்து வகையான இதய பிரச்சனைகளுக்கும் மருதம் பட்டை நல்லது. பரம்பரை பரம்பரையாக மரபணு சார்ந்த நீரிழிவு நோய் உள்ளவர்கள் அல்லது இதய நோய் உள்ள நபர்கள் ஒவ்வொருவரும் தூங்கச் செல்லும்முன் மருதம் பட்டை பொடி சேர்த்த தேநீர் அருந்துவது நல்லது.
யார் இந்த மூலிகைகளை எடுத்துக் கொள்ளலாம் ?
இரத்த சர்க்கரை அதிகம் இருப்பவர்கள், உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள்,
இதய நோய்கள் உள்ளவர்கள், இந்த மூலிகைகளை வழக்கமாகச் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும், ஆயுர்வேத நிபுணர்கள் வயதானவர்களுக்கு இந்த மூலிகைகள் மிகவும் உகந்தது என்கின்றனர்.